வெள்ளைக்கவரால் சிக்கிய ‘காமெடி’ திருடன்: சிசிடிவி-ல் அம்பலம்!

செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சஜின் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்றிரவு வழக்கம் போல் கடையின் கதவை பூட்டி விட்டு, இன்று காலை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்ததில், ரொக்கப்பணம் ரூ.47 ஆயிரம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தகவலறிந்து வந்த குளச்சல் போலீஸார் சிசிடிவி கேமராக் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிசிடிவி பதிவில், திருடன் வருவதும், கடைக்குள் சென்று திருடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர், வெள்ளை நிற கவரால் தலையை மறைத்துக்கொண்டு வந்துள்ளார். விளக்கு வெளிச்சத்தில் வெள்ளை நிறக் கவரை தலையில் மாட்டியிருப்பதால், அவரது முகம் பளிச்சென்று சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதை அறியாத திருடன் செல்போன் கடையில் திருடிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் அவரது முழு உருவப்படம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. எனவே கூடிய விரைவில் திருடனை பிடித்து விடுவோம் என்று போலீஸார் கூறியுள்ளனர். மேலும் இப்படி அறியாமையுடன் திருடி இருப்பதால், இது புதுத்திருடனாக இருக்கக்கூடும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிசிடிவி காட்சியை காண்பவருக்கோ அவர் காமெடித் திருடனாக காட்சியளிக்கிறார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts