மனைவிக்கு கார் ஓட்ட கற்றுத் தந்தபோது விபரீதம்: சிறுமி உடல் நசுங்கி பலி

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது கார் மோதியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை சூளைமேடு வன்னியர் 2-வது தெருவை சேர்ந்தவர் துரைவேலன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். வயது 7.

இவர் சூளைமேடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பவித்ரா நேற்று இரவு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அதேபகுதியில் வசிக்கும் டேனி என்பவர் தனது மனைவி ப்ரீத்திக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்திருக்கிறார்.

காரை எப்படி இயக்க வேண்டும் என மனைவிக்கு டேனி பயிற்சி கொடுத்துக் கொண்டே மனைவியை காரை இயக்கச் சொல்லியிருக்கிறார். காரை ஓட்டிப் பழகிய அவரது மனைவி தெரியாமல் இயக்கியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவின் மீது வேகமாக மோதியது.

இதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தார். இதனையறிந்து அலறியடித்த பவித்ராவின் பெற்றோர்கள் சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். டேனி-ப்ரீதிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்‌பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செயது, டேனி மற்றும் அவரது மனைவி பிரீத்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts