​மும்பை மாநகரை ஸ்தம்பிக்கச் செய்த விவசாயிகளின் போராட்டம்..!

மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த பல ஆயிரக் கணக்கான விவசாயிகள் 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்களாக சுமார் 180 கிலோ மீட்டர் நடைபயணமாக வந்து மும்பை மாநகரத்தை அடைந்த சம்பவம் வட இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் பெரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி அன்றே இந்த போராட்டம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவைச் சேர்ந்த அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 6ம் தேதி நாசிக்கிலிருந்து நடைபயணத்தை தொடங்கி மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 6ம் தேதி நாசிக்கில் 20,000 விவாசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்து தொடங்கிய இந்த போராட்டம் 12ம் தேதியான இன்று 50,000 விவசாயிகள், பழங்குடியின மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மும்பை மாநகருக்குள் நுழைந்து போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவாகிய அனைத்திந்திய இந்திய விவசாயிகள் சங்கத்தினால் ( All India Kisan Sabha) நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு மகராஷ்டிராவில் உள்ள அனைத்து எதிர் கட்சியினரும் ஆதரவு அளித்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு குடிநீர், உணவு முதலியவற்றை வழங்கி மும்பை மக்கள், விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு சுமார் 35 கிலோமீட்டர் நடந்துள்ள விவசாயிகள், தொடர்ந்து நடக்காமல் தேவையான இடங்களில் ஓய்வு எடுத்து, சமைத்து சாப்பிட்டு, பின்னர் தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

மும்பை மாநகருக்குள் நேற்று (11-03-2018) நுழைந்த விவசாயிகள், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பணிக்கு செல்பவர்களுக்கும் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இன்று அதிகாலையிலெயே தலைமைச்செயலகத்தை அடைந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 34 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த மத்திய அரசு, அதனை சரியாக அமல்படுத்தப்படவில்லை எனவும்  2017 ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர் எனவும் தெரிவித்த விவசாயிகள், அவர்களுடைய போராட்டத்திற்கு சரியான தீர்வு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய ஆறு பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளது மஹாராஷ்டிர அரசு. மிகவும் அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய விவசாயிகளுக்கு, சமூக ஆர்வளர்கள் மற்றும் பல்வேறு நாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 2017ல், ஆல் இந்தியா கிசான் சபாவை சேர்ந்த விவசாயிகள், 11 நாட்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் ஏற்பாடு செய்து நடத்திய இந்த போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் #Farmerstomumbai என்னும் ஹஸ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது மேலும் எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் இந்த போராட்டத்தை Sea of Red என பெயரிட்டுள்ளனர்.

அதாவது செங்கடல் என்பது இதன் பொருள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தங்களை அடிமைபடுத்தி வைத்திருந்த எகிப்து நாட்டின் பார்வோன் மன்னனின் சதி திட்டங்களை முறியடித்து செங்கடல் வழியாக தான் யூத மக்கள் செல்வ செழிப்பான பார்வோன் நாட்டிற்கு சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் 5 முக்கிய கோரிக்கைகள்:

1. அனைத்து விவசாய கடன்கள் மற்றும் மின்சார கட்டணங்களை எந்த வித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

3. எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அமசங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

4. இயற்கை அழிவு மற்றும் பூச்சிகளினால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நஷ்ட ஈடாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

5. பழங்குடியின மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை திருப்பியளிக்க வேண்டும் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்யபப்டுதல் தடுக்கப்பட வேண்டும்.

மகாராஷ்டிராவை ஆளும் பாஜக கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ், சிவ சேனா, மகராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா போன்ற கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts