வைத்தியசாலை வாசலே மிதிக்காத சிங்கம்!! 96 வயதினிலும் கம்பீரமாய்!! யோகா செய்தால் “சுக பிரசவம்”

கோவையில் வசிக்கும் நானம்மாள் என்ற 96 வயது பாட்டியை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.


அந்த அளவிற்கு யோகாவின் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்தவர்.சிரசாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறார் இவர்.

குழந்தையாக இருந்தபோதே தன் தாத்தா, பாட்டி யோகா செய்வதைப் பார்த்து, யோகா செய்யத் தொடங்கிவிட்டார் நானம்மாள். தற்போது யோகா ஆசிரியரான இவர்,ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இன்றளவும்,தானாகவே அணைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார்.கண் பார்வை நன்றாக உள்ளது, நூலை ஊசியில் கோர்க்கும் அளவிற்கு அவருடைய கண் பார்வை உள்ளது…

கை வலி கால் வலி உள்ளிட்ட எந்த வழியும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர யோகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

சுக பிரசவம்
யோகா செய்து வந்தால்,கண்டிப்பாக சுக பிரசவம் ஏற்படும் என கோவையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசினார்

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் நடக்கிறது.சுக பிரசவம் என்பது கேள்வி குறியாகி உள்ளது .எனவே தினமும் யோகா செய்து பழகுங்கள், நான் தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து யோகா செய்வேன் என்று குறிப்பிட்டு உள்ளார் அதுமட்டுமில்லாமல், கம்பு வரகு, அரிசி, குதிரை வாலி உள்ளிட்ட சத்தான உணவை உட்கொண்டு வருவது நல்லது, நானும் அதனை தான் உண்டு வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் யோகா சூப்பர் ஸ்டார் நானம்மாள்.

பார்வை பளீரென இருக்கிறது… தினம் நான்கைந்து கிலோ மீட்டர் நடக்கிறார்… சிறிதும் சோர்வில்லை. இந்த உதாரண மனுஷி, தேசிய யோகா சாம்பியனும் கூட. கடந்த ஆண்டு அந்தமானில் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன் போட்டியில் ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம் பெற்று மிரள வைத்திருக்கிறார். பல்வேறு சாதனைப் புத்தகங்கள் நானம்மாளின் புகழ் பாடுகின்றன!

நானம்மாளின் குடும்பத்துக்கு யோகாவோடு தலைமுறைத் தொடர்பு உண்டு. இவரின் தாத்தா பொன்னையா யோகாவில் கரை கண்ட வல்லுநர். அப்பா ரங்கசாமியும் சித்தப்பா மன்னார்சாமியும் கோதா, பட்டி, சிலம்பம், யோகாவில் பெயர் பெற்றவர்கள். அவர்களிடம் கலை பயின்ற நானம்மாள் மணம் முடித்த வெங்கிடசாமியும் சித்த வைத்தியத்திலும் யோகாவிலும் நிபுணர். பிள்ளைகள் சரஸ்வதி, அனுசுயா, பாலகிருஷ்ணன், எள்ளுச்சாமி, ராஜாமணி – ஐவரும் யோகா ஆசிரியர்கள். பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தி வரை யோகா மரபு நீள்கிறது.

அனைத்துக்கும் விதை நானம்மாள். இன்றளவும் தாகம் குறையாமல் பேரன், பேத்திகளுக்கு இணையாக உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்று, ஆசனங்களில் அசத்தி, பதக்கங்கள் வாங்கி கலக்குகிறார். பல நூறு பேருக்கு யோகா பயிற்றுவிக்கிறார். பழங்குடிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கிறார்.

‘‘யோகாவுக்கும் எங்க குடும்பத்துக்கும் ஜென்மத் தொடர்பு. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லோரும் யோகா மாஸ்டர்கள். 5 வயசுலயே நானும் பழகிட்டேன். நிறைய பேருக்கு பழகிக்கொடுத்தேன். கல்யாணத்துக்குப் பிறகு வெளிப் பயிற்சி இல்லை. ஆனா, எனக்கு நானே தீவிரமா பயிற்சி எடுத்துக்கிட்டேன். யோகாவை பத்தி நம்ம மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரலே.

வாழ்க்கைக்கும் யோகாவுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரியே இருக்காங்க. அதை ஒரு கலைன்னு சொல்லிச் சொல்லியே அந்நியப்படுத்திட்டாங்க. உண்மையில அது வாழ்க்கையோட அங்கம். நம்ம மூதாதைகள் அப்படித்தான் வாழ்ந்தாங்க. யோகா நல்லாத் தெரிஞ்ச ஒருத்தரை எந்த நோயும் நெருங்காது. மனமும் உடலும் உறுதியா இருக்கும். எவ்வளவு கடினமான வேலையையும் உற்சாகமா செஞ்சு முடிப்பாங்க. கவனம் சிதறாது.

நாங்க நிறைய தோட்டங்கள் வச்சிருந்தோம். காலையில தோட்டத்துக்குப் போனா சாயங்காலம் தான் வீட்டுக்கு வருவோம். உடம்புல எவ்வளவு களைப்பு இருந்தாலும், அஞ்சு நிமிஷம் பிராணாயாமம் செஞ்சா காணாமப் போயிடும்.

கால் வலி, கை வலின்னு தவிக்கறவங்களுக்கு அதுக்குத் தகுந்த ஆசனங்களைச் சொல்லிக் கொடுப்பேன். நம்ம உடம்புக்கான சக்தியை வெளியில தேட வேண்டியதில்லை. அது நமக்குள்ளேயே இருக்கு. அதைக் கண்டுபிடிச்சுட்டா போதும். ஆரோக்கியத்துல ஒரு குறைவும் வராது…’ – உற்சாகமாகப் பேசுகிறார் நானம்மாள்.

நானம்மாளின் கணவர் வெங்கிடசாமி, சித்த மருத்துவர். இயற்கை வைத்தியம், யோகாவிலும் தேர்ந்தவர். தூரத்து உறவுக்காரர்களான நானம்மாளையும் வெங்கிடசாமியையும் யோகாதான் இல்லறத்தில் இணைத்து வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன் வெங்கிடசாமி காலமாகி விட்டார். ‘‘எங்க காலத்துல தினமும் தண்ணி எடுக்க, சந்தைக்குப் போகன்னு ஏதாவது ஒரு காரணத்தை வச்சு ஆறேழு கிலோ மீட்டர் நடப்போம். இன்னைக்கு நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையே.

சைக்கிள் கூட நம்ம பிள்ளைங்க ஓட்டுறதில்லை. பைக், கார்னு பக்கத்துத் தெருவுக்கு போறதுன்னாக் கூட உடம்பு நோகாம வாகனம்தான். அன்னைக்கு அடுப்புல சமைச்சோம். ஊதாங்குழல் வச்சு ஊதுவோம். அதுதான் மூச்சுப்பயிற்சி. வெளியில இருக்கிற காத்தை தம்புடிச்சு உள்ளே இழுத்து மெதுவா வெளியே ஊதுறது. இப்போ கேஸ் வந்திடுச்சு. மூச்சை இழுத்து விடுறது கூட பெரிய வேலையா நினைக்கிற அளவுக்கு காலம் மாறிப்போச்சு.

ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லு, உரல்னு எல்லாத்துக்கும் சக்தி தேவைப்பட்டுச்சு. சாதாரணமா, நாங்கள்லாம் ஒரு நாளைக்கு நாப்பது, அம்பது தடவையாவது குனிஞ்சு நிமிருவோம். அதனால அடிவயிறு பலமாச்சு. கர்ப்பப்பை நல்லா செயல்பட்டுச்சு. கல்லீரல், கணையம் எல்லாமே வேலையை ஒழுங்கா பாத்துச்சு.

இன்னைக்கு குனிஞ்சு நிமிர எல்லாருக்கும் கசப்பா இருக்கு. 45ல இருந்து 60 வயசுக்குள்ள 40 சதவிகித பொம்புளப் புள்ளைகளுக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய நிலைமை வருது. சின்னச் சின்ன பசங்களுக்கெல்லாம் மாரடைப்பு வருது. நீரிழிவு வருது. வாழ்க்கை முறையில ஏற்பட்ட மாற்றங்களும் உடல் உழைப்பு இல்லாததும் ஆயுளைக் குறைச்சிடுச்சு.

மனுஷனும் இயற்கையும் வேறு வேறு இல்லை. அந்த உறவுச் சங்கிலியை அறுத்துக்கிட்டு மனுஷன் தனிச்சு வாழ முயற்சி பண்றான். அதுதான் எல்லாச் சிக்கலுக்கும் காரணம். குழந்தைகளுக்கு சாதாரணமா காய்ச்சலோ, சளியோ வந்தாக்கூட இன்னைக்குள்ள புள்ளைங்க உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுதுங்க. எம்புள்ளைகளுக்குக் காய்ச்சல் வந்தா, நாலு வேப்பங்கொழுந்து, 5 குறுமிளகு,

1 சின்ன வெங்காயம், துளி மஞ்சள் தூள் சேர்த்து அரைச்சு கொடுத்திருவேன். எதுக்கும் விடாத காய்ச்சலும் இதுக்கு விட்டுடும். அப்படியும் விடலன்னா, முதல் நாள் இரவுல தண்ணியில வேப்பந்தழையைப் போட்டு ஊற வச்சு மறுநாள் அந்த தண்ணியில குளிப்பாட்டுவேன். காய்ச்சல் ஓடிப்போயிடும். சளிப்பிடிச்சா கொஞ்சம் துளசி இலையைப் பறிச்சு கையில வச்சுக் கசக்கி சாறெடுத்து கொஞ்சூண்டு தேன் கலந்து குழப்பிக் கொடுத்திருவேன்.

கூடுதலா இருமல் இருந்தா நாலு குறுமிளகைச் சேத்துக்குவேன். எல்லாத்துக்கும் நம்பிக்கை வேணும். மனோபாவம் மாறி நம்பிக்கை வந்தா எல்லாம் சரியாப் போகும்..’ என்கிறார் நானம்மாள்.நானம்மாள் பெற்ற 5 பிள்ளைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். மருத்துவமனைக்கே போவதில்லையாம்!

‘‘இன்னைக்கு சர்வ சாதாரணமா சிசேரியன் பண்றாங்க. டாக்டர்கள் கொஞ்சம் தாமதிச்சாக் கூட ஆபரேஷன் பண்ணிடுங்கன்னு இவங்களே சொல்லிடு றாங்க. குழந்தை இல்லாத தம்பதிகளோட எண்ணிக்கையும் அதிகமாகிட்டிருக்கு. கோயமுத்தூர்ல மட்டும் 27 கரு உருவாக்கல் மையங்கள் இருக்கு. எல்லாத்திலயுமே கூட்டம் தள்ளி விலக்குது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி… எல்லாச் சுரப்பியும் தேவையான அளவுக்கு ரசாயனங்களைச் சுரந்தா உடம்பு எந்த வம்பும் பண்ணாம அது போக்குல செயல்பட்டுக்கிட்டே இருக்கும். அதுக்கு ஒரே வழி யோகா செய்றதுதான்.

தைராய்டு பிரச்னை இன்னைக்கு குழந்தைகளைக் கூட பிடிச்சு ஆட்டுது. தினம் காலையில சர்வாங்காசனம் செஞ்சா தைராய்டு சுரப்பி குழப்பமில்லாம சுரக்கும். எலும்புகள் பலமாகும். கர்ப்பப்பை பலமடையும். பீரியட்ஸ்ல குழப்பமே வராது. ஹாலாசனம், சலபாசனம் செஞ்சா கணையம் நல்லாச் சுரக்கும். நீரிழிவே வராது. மச்சாசனம் செஞ்சா இதயம் பலமாகும். நுரையீரல் நல்லா செயல்படும். இந்த ஆசனத்தை குழந்தைங்க செஞ்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மயூராசனம் செஞ்சா கல்லீரல் நல்லா வேலை செய்யும். வஜ்ராசனம் செஞ்சா மனசு லேசாகும். மூட்டுவாதம், கால்வலி சரியாகும். சிறுநீரகம் பலப்படும். கூர்மாசனமும் புஜங்காசனமும் ஆஸ்துமாவை குணப்படுத்தும். பிட்யூட்டரி சுரப்பியை நல்லா சுரக்க வைக்கும். சிரசாசனம் செஞ்சா கெட்ட கொழுப்பு அழியும். இந்த மாதிரி 84 லட்சம் ஆசனங்களை நம் முன்னோர் எழுதி வச்சிருக்காங்க. அதுல 50 ஆசனங்களை தெரிஞ்சுகிட்டாப் போதும். உடம்புல ஒரு பிரச்னையும் வராது. நீண்ட ஆயுள் கிடைக்கும்’’ என்கிறார் நானம்மாள்.

அந்த வார்த்தைகளுக்கு உயிர் சாட்சியாக அவரே இருக்கிறார். இத்தனை வயதுக்கு ஆங்கில மருத்துவம் தயாரித்த ஒரு மாத்திரையைக் கூட சாப்பிட்டதில்லை நானம்மாள். ஒரு ஊசி போட்டுக் கொண்டதில்லை! நானம்மாள் யோகா போட்டியில் பங்கேற்றதே எதிர்பாராத சம்பவம். அவரது வெற்றிப் பயணம் தொடங்கியது 80 வயதுக்கு மேல்தான் என்பது கூடுதல் சுவாரஸ்யம். வழக்கமாக தமிழகமெங்கும் நடக்கும் யோகா போட்டிகளுக்கு பேரன், பேத்திகளை அழைத்துச் செல்வது வழக்கம்.

ராமநாதபுரத்தில் நடந்த தேசிய யோகா போட்டிக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்றிருக்கிறார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,500 போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டி அது. அதில் ஏற்பட்ட ஒரு பிரச்னையே நானம்மாளை களத்தில் கொண்டு போய் நிறுத்தியது. ‘‘அந்தப் போட்டியில ஒரு பொண்ணு தப்புத்தப்பா சர்வாங்காசனம் செஞ்சா.

நடுவர்களும் பாராட்டினாங்க. எனக்கு வருத்தமா போச்சு. யோகாங்கிறது பெரிய சத்தியம். அது எப்போதும் மாறாது. அதைத் தப்பா செய்றதே தப்பு. தேசிய அளவுல நடக்கிற ஒரு போட்டியில தப்பா செஞ்சு அதை நடுவர்களும் பாராட்டினா எப்படி? உடனே நான் ஸ்டேஜுக்குப் போய், ‘இந்தப் பொண்ணு தப்பா செய்யுது. சர்வாங்காசனத்தை இப்படிச் செய்யக்கூடாது’ன்னு சொன்னேன்.

 

உடனே அந்தப் பெண்ணோட மாஸ்டருக்கு கோபம் வந்திருச்சு. ‘உன்னால முடிஞ்சா அந்த ஆசனத்தை சரியா செஞ்சு காட்டும்மா’ன்னு சொன்னார். படபடன்னு மேடையில ஏறி அந்த ஆசனத்தை செஞ்சேன். எல்லாரும் அசந்துட்டாங்க. முதல் பரிசையும் எனக்கே கொடுத்தாங்க. அப்போ ஆரம்பிச்சதுதான் போட்டியெல்லாம்.

இதுவரைக்கும் 30 போட்டிகள்ல கலந்துக்கிட்டு எல்லாத்திலயும் ஜெயிச்சிருக்கேன். ரெண்டு வருஷம் முன்னாடி அந்தமான்ல நடந்த தேசிய யோகா போட்டியிலயும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கிட்டு வந்தேன்…’ என்றபடி பரிசுகளையும் பதக்கங்களையும் அள்ளிக்காட்டி குழந்தையைப் போல சிரிக்கிறார் நானம்மாள்.

நானம்மாள் வாழ்க்கையை ஒரு தவம் போல வாழ்கிறார். அவ்வளவு கட்டுப்பாடு. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விடுகிறார். முதல் நாள் இரவே 5 துளசி இலை, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து வைத்திருக்கும் முக்கால் லிட்டர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கிறார். பிறகு ஒரு வேப்பங்குச்சி ஒடித்துக் கடித்தபடி காலைக்கடன்களை முடிக்கிறார். கால் மணி நேரம் அந்த வேப்பஞ்சாறு உள்ளே இறங்குகிறது.

அப்படியே மெல்ல நடக்கிறார். குறைந்தது முக்கால் மணி நேரம் மென்நடை.‘‘வேப்பஞ்சாறு வாயில பட்டா ஈறு பலப்படும். வயித்துக்குள்ள இருக்கிற கெட்ட பூச்சிகள்லாம் அழிஞ்சிடும். தினமும் கால் மணி நேரம் வேப்பங்குச்சி வாயில இருக்கும். 6 மணி வரைக்கும் நடை. அதுக்குப் பிறகு ஆசனம் தொடங்கிருவேன்.

ஆசனம் கத்துக்க பத்துப் பதினைஞ்சு பேர் வருவாங்க. முதல்ல பச்சிமோத்தான் ஆசனா செய்வேன். அதை ‘எமனை வெல்லும் ஆசனம்’னு சொல்லுவாங்க. அப்புறம் சர்வாங்காசனம், மச்சாசனம், பத்மாசனம், தூலாசனம்னு 15ல இருந்து 20 ஆசனங்கள் செய்வேன். அப்புறம் சூரிய நமஸ்காரம், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம்… இது மூணும் யோகாசனத்தோட தொடர்புடையது. ஆசனம் செஞ்சு முடிச்சதும் வாசல் தெளிக்கிறது, வீடு கூட்டுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன்.

அப்புறம் காலை சமையலுக்கு பிள்ளைகளுக்கு உதவி செய்வேன். எட்டரை மணிக்கு காலை உணவு. ராகி, சாமை, திணை, மக்காச்சோளம், பாசிப் பயறு, வரகு, கம்பு எல்லாத்தையும் தனித்தனியா வறுத்து சேர்த்து அரைச்சு வச்சிருக்கோம். அதுல காச்சப்படுற கஞ்சி சத்தானது. எல்லாருக்குமே அதுதான் காலை உணவு. அதுக்கு தொட்டுக்க தினமும் ஒரு பொரியல்.

அவரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய்னு ஏதாவது ஒரு காய். மதியம் சாதத்தோட தினமும் ஒரு கீரை, வீட்டிலேயே விளைகிறது. கொஞ்சமா சாதம் எடுத்துக்குவேன். சாயங்காலம் இளங்கதிர் நேரத்துல திரும்பவும் சூரிய நமஸ்காரம். இரவு நிறைய குழந்தைகள் வருவாங்க. அவங்களுக்கு யோகா பயிற்சி. அரை டம்ளர் பால், ஒரு வாழைப்பழம்… அவ்வளவு தான் ராத்திரிக்கு. 8 மணிக்கெல்லாம் தூங்கப் போயிடுவேன். வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்துறதில்லை.

அவ்வப்போது வெற்றிலை போடுவேன். மற்றபடி டீ, காபி குடிக்கிறதில்லை. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளியல்… இதுதான் என் ஆரோக்கிய ரகசியம்..’ என்று சிரிக்கிறார் நானம்மாள்.அந்த வாஞ்சையான சிரிப்பில் அன்பும் கனிவும் ததும்புகிறது! நானம்மாள் வாழ்க்கையை ஒரு தவம் போல வாழ்கிறார்… அவ்வளவு கட்டுப்பாடு. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விடுகிறார்!

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts